Tuesday, 20 November 2012

                                                         ஆனந்த அதிகாரம்

அந்த இரவு விடிந்திருக்க கூடாது..
அந்த கனவும் முடிந்திருக்க கூடாது...

ஒவ்வொரு தருணத்திலும்
உன் விழிகளில் உருவாகும்
கண்ணீர் துளி ஒவ்வொன்றும்
என் சொல் வெப்பத்தால் கருகி போனது

நீ மூச்சடக்கி...
ஒவ்வொரு துளிகளையும்...மிக துயரத்துடன்
மெதுவாக விழுங்கி கொண்டாய்...

ஆனந்தமாய்
அழக்கூட விடாத உரிமையை
யார் கொடுத்தது...அந்த அரக்கனுக்கு...

எதோச்சதிகார சாட்டையை வீசி
உன் சில ரணங்களுக்கு மருந்திட்டாலும்
பல ரணங்களில் குறுதி கொப்பளிக்க வைத்தவன்...

ஒருவன் மது மயக்கத்திலும்..
ஒருவன் மன மயக்கத்திலும்
உறங்கிய பின்
மெதுவாக விலகி சென்று
சோபாவில்
சத்தமில்லாமலும்..
ஈரமில்லாமலும்
அழுது தீர்த்துக்கொண்டாய்..
இவன் உடல் உறங்கினாலும்
மனம் உறங்காமல் கவனித்ததை நீ அறிய மாட்டாய்

விடியும் நேரத்தில்
அருகில் வந்தாய்..

இந்த உக்கிர புத்தனின்
உள்ளங்கை பற்றி
உன் நெஞ்சுக்கூட்டுக்குள் வைத்து
அமைதியாய் உறங்க தொடங்கியது
உன் கவிதைக்குஞ்சு.....

இவனைப்பற்றி
கவிதை செதுக்குகிறாய்
மரணம் என்றால் பதறிப் போகிறாய்...

நாமிறப்பினும்
என்றாவது
எங்காவது..ஏதாவது
ஒரு நூலக அறையில்
உன் கவிதை வாசிக்கப்படும்..
வாசிப்பவனின் உள் அலறலில்....

என் கல்லறை
விரிசல் வழியே
என் ஆத்மாவின் ஈரம் கசியும்..

நீ தமிழில் கரைய விட்ட
உன் ஆத்மா...
எழுத்து வடிவில் அதை கண்டு
ஆனந்த புன்னகை பூக்கும்.....

இனி
இவன் தேசத்து சட்டங்கள்

மாறிப்போகும்

இனி சுகமாக
அழுபவர்கள் மட்டும்
என் மனக்கரையில்
புதிதாக வெட்டப்படும் குளத்தில்
அழுதுகொள்ளலாம்

ஆனந்த கண்ணீர்
ருசிக்கப்படும்....தித்திப்பாக இருந்தால்
மட்டுமே அழ அனுமதி...

உப்பாக இருந்தால்
என் எல்லைதாண்டி சென்று விடுங்கள்

இது அன்பு தேசத்து
ஆணவ அரக்கனின் அறிவிப்பு..










1 comment:

  1. அன்பு தேசத்து ஆணவ அரக்கா...இன்னும் என் அழுகையும் உன் ஆறுதலும் காத்திருக்கும் மற்றொரு இரவுக்கு....

    ReplyDelete